Wednesday, June 20, 2018

ஊத்துமலை கோயில்

அரிய வகை மூலிகைகளும் மருத்துவ குணம்கொண்ட சுனைகளும் நிரம்பிய திருத்தலம், ஊத்துமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் இந்த மலையின்மீது கோயில் கொண்டிருக்கிறார் பாலசுப்ரமணிய சுவாமி.
நின்றகோலத்தில் அழகுத் திருக்கோலம் காட்டும் இந்த முருகப்பெருமானை அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர் ஆகிய முனிவர்கள் வழிபட்டு, அருள்பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வந்து இவரை ஒருமுறை தரிசிக்க, நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நிறைவேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை. முருகப் பெருமானின் இடப்புறத்தில் விநாயகரும், வலப்புறத்தில் நந்தியுடன்கூடிய சிவலிங்க மூர்த்தியும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலுக்கு பல சிறப்புகள் உண்டு.
இங்கே, எட்டுத் திருக்கரங்களுடன் வடக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீசக்ர மஹா கால பைரவர். தேய்பிறை அஷ்டமி நாள்களில் இங்கே நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு இந்தப் பைரவரை வழிபட்டால், சனி தோஷம் முதலான கிரக தோஷங்கள் நீங்கும், எதிரிகள் தொல்லை அகலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
அதேபோல், இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீசக்ர தரிசனம். ஆம்... கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீசக்ர சந்நிதி அமைந்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து மனைவி லோபாமுத்திரையுடன் புறப்பட்ட அகத்தியர், ஊத்துமலையில் தங்கியிருந்த போது, ஒரு பாறையில் செங்குத்தாக ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அதற்குச் சான்றாக இங்குள்ள ஸ்ரீசக்ரத்தின் அருகில் அகத்தியர், லோபாமுத்திரை ஆகியோரின் சிற்பங்களைக் காணமுடிகிறது. இந்த ஸ்ரீசக்ரத்தின்முன்பு நின்று வணங்கினால், அனைத்துவிதமான நோய்களும் நீங்கிவிடுவதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இங்கே பௌர்ணமி நாளில் பதினெட்டு சித்தர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்துகொள்வதன்மூலம் சித்தர்களின் அருள் கிடைப்பதாக ஐதீகம்.
ஸ்ரீசக்ரம் இருக்கும் பகுதிக்கு தெற்கில், கபிலர் தியான குகை அமைந்துள்ளது. இந்தக் குகையில் முனிவர்கள் தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும் என்பது நம்பிக்கை.
நீங்களும் ஒருமுறை ஊத்து மலைக்குச் சென்று முருகனின் திருவருளோடு, சித்தர்களின் ஆசியையும் பெற்று வாருங்களேன்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி, சீலநாயக்கன்பட்டி பைபாஸில் இறங்கினால், நடந்து செல்லும் தொலைவில் ஊத்துமலை கோயில் உள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது

Monday, June 18, 2018

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

1.ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாதுஎன்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2.காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3.சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
4.சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5.சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6.சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7.சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8.சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
9.சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10.சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து...மேலும் படிக்க : goo.gl/kPfwvP

Sunday, June 17, 2018

மந்திரம் – நாமம்

மந்திரம் என்பது இறைவனின் நாமமே. மன ஒருமைப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் சொல்லப்படும் இறைத் திருநாமமே மந்திரம் ஆகிறது.‘ஒரு மந்திரத்தைத் தெரிந்து கொண்டு அதனைத் திரும்ப திரும்பச் சொல்வது ‘உரு’ எனப்படுகிறது.
இப்படி திரும்ப திரும்ப ஒரு மந்திரம் உருப்போடும் பொழுது மனம் ஒருமைப்படுகிறது. கடவுளின் அருள் கிடைக்கின்றது. நினைத்தது நடக்கிறது. நமது நல்ல எண்ணங்களை வலுப்படுத்துவதிலும், அதனை நிறைவேற்றுவதிலும் மந்திரங்களுக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை.’
நமது தினசரி வாழ்வில் மந்திரங்கள் அற்புத ஆற்றல்களைக் கொடுக்கின்றன. மந்திரங்கள் இறைவனுக்கும் நமக்கும் இடையே பாலமாக அமைகிறது.
எவ்வாறு மந்திரம் சொல்லுதல் வேண்டும்?
1.நம்பிக்கையோடு மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்
2.மன ஒருமைப்பாட்டுடன் மந்திரத்தைச் சொல்லுதல் வேண்டும்.
3.ஒரு நல்ல நாளில் ஆலயத்தில் தட்சிணா மூர்த்தி சன்னதியில் அவரை வேண்டி, குரு நிலையில் இருந்து அவர் நமக்குச் சொல்வதாகக் கருதிச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
4.நாள்தோறும் இஷ்ட மந்திரத்தைக் குறைந்தது 27 முறைகளாவது ஜபித்தல் வேண்டும்.
5.நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் மந்திரத்தைச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.
நாமத்தைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகள்
1.புண்ணியம் கிடைக்கின்றது
“எல்லா புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், அவிமுக்தி தலமான காசியில் எண்ணற்ற லிங்கங்களை ஸ்தாபிதம் செய்தல், வேத விற்பன்னர்களுக்குச் சூரிய கிரகணத்தன்று பலமுறை பல கோடி சொர்ண தானம் செய்தல், கங்கைக் கரையில் அஸ்வமேத யாகம் செய்தல், தண்ணீர் கிடைக்காத இடங்களில் பல கிணறுகள் வெட்டுதல், பஞ்ச காலத்தில் நூற்றுக் கணக்கானோருக்கு அன்ன தானம் செய்தல் இவை யாவும் செய்வதால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கின்றதோ அதற்கு ஈடான புண்ணியம் இறைவனின் திரு நாமத்தை உச்சரிப்பதனால் கிடைக்கும்”.
2.பாவங்கள் நாசமாகின்றன
“சிவ சிவ” என்று ஜபிப்பதால் பல கோடி பாவங்கள் உடனடியாக நாசமாகின்றன” என்கிறது பிரம்ம புராணம். மனிதராகப் பிறப்பெடுத்த நாம் அறிந்தும் அறியாமலும் பாவங்களைச் செய்கின்றோம். அந்தப் பாவங்கள் நாசமாக நன்மைகள் உதயமாக நாமத்தைச் சொல்லுதல் வேண்டும். பாவ எண்ணங்களிலிலுந்து, தீய எண்ணங்களிலிருந்து விடுபட நாமத்தை நவிலுதல் வேண்டும். கொல்லித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க் குரங்காய்த் துள்ளுகின்ற கள்ள மனத்தை அடக்கியாள்வதற்கு இறைவன் திருப் பெயரை இயம்புங்கள்.
3.சகல நன்மைகளும் கிடைக்கின்றன
கல்வி, செல்வம், நல்ல வேலை, நல்ல கணவன் ̸ மனைவி, மக்கள், வாழ்க்கையில் நிம்மதி, அமைதி, எதிலும் வெற்றி இவைதாமே எப்போதும் நாம் அடைய நினைப்பவை. இந்த நன்மைகள் அனைத்தும் நம்மை நாடி வந்து சேர்வதற்கு ஆண்டவன் பெயரை அல்லும் பகலும் சொல்லுங்கள்.
4.ஞானம் கைகூடுகின்றது
“நல்ல ஞானம் வேண்டும் என விரும்புகின்றவர்கள் இறைவனின் நாமத்தை ஓத வேண்டும்” என்கிறார் ஆதி சங்கரர். வாழ்க்கையின் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் மனநிலை ஞானமாகும். “போருக்கு நின்றிடும் போதும் சிந்தை பொங்குதல் இல்லா நிலையே ஞானம்” என்பான் பாரதி. இந்த நிலை அடைதல் என்பது இறை நாமம் சொல்லுபவர்க்கே மிகவும் எளிது.
5.முக்திப் பேற்றுக்கு வழிகாட்டுகின்றது
முக்திப் பேற்றுக்கும் வழி காட்டுகிறது நாமம், “முக்தியடைவதற்கு கிருஷ்ணா! கோவிந்தா! என்ற திருப் பெயர்களை எல்லா நேரங்களிலும் சொல்லிக் கொண்டிருப்பது ஒன்றே போதுமானது” என்று கூறுவார்கள்

சொந்த வீடு வாங்க எளிய பரிகாரங்கள்.....

:- சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியது தானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.
:- சிவப்பு நிற மலர்களால் செவ்வாய்க்கிழமை நல்ல நேரத்தில் செவ்வாய் பகவானை பூஜித்து அர்ச்சனை செய்து வர விரைவில் சொந்தவீடு கட்டும் வாய்ப்புகள் அமையும்.
:- நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை வணங்கி ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை 1008 முறை உச்சரித்து, ஆலயத்திலேயே ஆறு மணிநேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சள் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி தெளிக்க வேண்டும்.
:- வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாயன்று அபிஷேகம் செய்து வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும் வாய்ப்புகள் அமையும்.
:- நிலம், வீடு வாங்கும் யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை விரதமிருந்து வழிபட்டு வரவேண்டும்.
:- வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்கும் வாய்ப்பு அமையும்.
:- ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் வாய்ப்புகள் அமையும் என்பது ஐதீகம்.

Tuesday, June 12, 2018

கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்பொருளாதாரப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடன் இந்த நரசிம்ம துதியை பாராயணம் செய்தால் கடன் பிரச்சனைகள் தீரும். இத்துதி நரசிம்ம புராணத்தில் உள்ளது. தினமும் இத்துதியை உளமாறப் படித்தால், அவரருளால் கடன் தொல்லைகள் நீங்கி, நிம்மதியான புது வாழ்வு பெறலாம்.
ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரம்
தேவதா கார்யஸித்யர்த்தம் ஸபாஸ்தம்பஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
தேவதைகளின் காரிய வெற்றியின் பொருட்டு இரண்யனின் ராஜசபையில் உள்ள தூணில் தோன்றியவரும், மகாவீரரும் ஆன நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
மகாலட்சுமி தேவியால் ஆலிங்கனம் செய்யப்பட்டவரே, பக்தர்கள் கேட்கும் வரங்களையெல்லாம் வாரி வழங்குபவரே, மகா வீரரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
இரண்யனின் நரம்புகளை மாலையாகத் தரித்துக் கொண்டவரே, சங்கம், சக்ரம், தாமரைப்பூ, ஆயுதம் ஆகியவற்றைப் பூண்டவரே, வீரத்துக்கு வித்தானவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ஸ்மரணாத் ஸர்வபாபக்னம் கத்ரூஜ விஷநாஸனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
நினைத்த மாத்திரத்திலேயே எல்லா பாவங்களையும் போக்கி அருள்பவரே, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாஸனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
மிகுத்து ஒலிக்கும் சிம்ம கர்ஜனையால் எத்திசையிலிருந்தும் வரும் பயத்தை அழித்து ஒழிப்பவரே, அநியாய எதிர்ப்புகளை துவம்சம் செய்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர விதாரணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
பிரகலாதனுக்கு வரமளித்து, அற்புத தரிசனம் அருளியவரே, லட்சுமியின் நாயகனே, அசுர ராஜனான இரண்யனின் மார்பைப் பிளந்தவரே, நரசிம்ம மூர்த்தியே, நமஸ்காரம்.
க்ரூரக்ரஹை: பீடிதானாம் பக்தானாமபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
கேடுகள் விளைவிக்கும் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் பெற்ற பக்தர்களுக்கு அத்துன்பங்களை நீக்கி அபயம் அளிப்பவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
வேத வேதாந்த யக்ஞேஸம் ப்ரஹ்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
வேதம், உபநிஷத்து, யக்ஞம், இவற்றுக்கு ஈச்வரனாக விளங்குபவரே, ப்ரம்மா, ருத்ரன் போன்றோரால் வணங்கப்படுபவரே, நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.
ய: இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்க்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸத்ய: தனம் ஸீக்ரமவாப்னுயாத்.
யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு சம்பந்தமான எந்தக் கடனும் இல்லாதவராக ஆவர். நரசிம்மர் திருவருளால் தனப் பிராப்தி பெருகும் என்பது நிச்சயம். நரசிம்ம மூர்த்தியே நமஸ்காரம்.

Monday, June 11, 2018

வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா?

*வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க வேண்டுமா? அப்போ இந்த இரண்டு பொருட்களையும் வீட்டின் நான்கு மூலையிலும் போடுங்க!!*
தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்
1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்
வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்
2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்
தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு...

Sunday, June 10, 2018

நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை!

எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.
இதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்கியிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு அவதரித்தார் நரசிம்மர்.
அடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.
என்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.
அப்படி நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது... மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்... அவதரித்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.
ஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.