Thursday, August 8, 2013

சிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)


 

ஞானசம்பந்தப் பெருமான் புனல்வாதின் போது பாடியருளிய திருப்பாசுரம். சமணமன்னன் கூன்பாண்டியனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பாசுரமிது.


வேலை இல்லாத தொல்லை நீங்குவதற்கும், பாராட்டுக்குரிய செயல்களைச் செய்து புகழைப் பெறுவதற்கும், தெய்வ வழிபாடு, புண்ணியச் செயல் முதலியவற்றில் ஈடுபாடு கூடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இது திருப்பாசுரம் எனப்படும்


திருச்சிற்றம்பலம்


வாழ்க அந்தணர்திருச்சிற்றம்பலம்


Nalamigu Padhigangal 40 Vol 3


திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம்


572 வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
01
573.அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
02
574. வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ.
03
575. ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
04
576.ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே.
05
577. ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
06
578. கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே.
07
579. வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
08
580.பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.
09
581.மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.
10
582.அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.
11
583.நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
12
திருச்சிற்றம்பலம்

*
 சைவநெறியே மெய்ந்நெறியென்று நிலைநாட்டிய திருப்பாசுரம் எனப்படும் "வாழ்க அந்தணர்" என்னும் திருப்பதிகம், இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
நல்லவர்களால்தான் நாடு வாழ்கின்றது. இதனை அவ்வையார், "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்றார். திருவள்ளுவரும், "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்றார். நல்லோரைப் பண்புடையார் என்றார் வள்ளுவர்.


நல்லவர்களை, பண்பாளர்களை, சான்றோர் என்று பேசுகிறது புறநானூறு. "யாண்டு பலவாக நரையில வாகுதல்" எப்படி சாத்தியமாயிற்று, என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையாக அதே பாடலின் நிறைவில், "ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே" என்று தெளிவுபடுத்துகிறார்.


எனவே, அரைகுறையான, வளர்ச்சியடையாத மக்களும், பிற உயிரினங்களும் வாழ்வாங்கு வாழவேண்டுமானால், நல்லவர்கள் அந்த நாட்டில் வாழவேண்டும்.


இது குறித்தே மற்றொரு புறநானூற்றுப் புலவரும் "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" எனக் கூறிப்போந்தார்.


இவ்வரிய கருத்தை ஒட்டியே ஞானசம்பந்தர், சைவ நெறியை நிலைநிறுத்தப் பாடியருளிய, "வாழ்க அந்தணர்" என்ற பதிகத்தில், உலகம் வாழவேண்டுமானால், மூவர் முதலில் வாழ வேண்டும், என்று அருளினார். அம்மூவரார், அந்தணர், வானவர், ஆனினம் என்பர். ஆம். பிற உயிர்களிடத்துச் செந்தண்மை பூண்ட அந்தணர்களால் சாதாரண மக்களும் நல்லவர்கள் ஆகின்றனர். இதனால் அந்தணர்கள் முதலில் வாழவேண்டும்.


இவர்கள் பூசுரர் எனப் பெயர் பெறுவர். சுரர் என்றால் தேவர் எனப்பெறுவர். இவர்களை நல்லவர்கள் என்பர். அசுரர் என்றால் நல்லவர்கள் அல்லாதவர்கள். அசுரர்களே வல்லவர்கள், திறமை மிக்கவர்கள். ஆனால் பிற உயிர்களுக்கு பெரும்பாலும் தீங்கு செய்பவர்கள். இக்கருத்தை அருணகிரிநாதர் ஒராற்றால் குறிப்பிடுவது காண்க. "வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடிவேலைத் தொடுவோனே" என்பது அவர் வாக்கு.


அந்தணர்களைப் பூசுரர் என்பார்கள். பூ-பூமியில் சுரர்-தேவர்கள. சேக்கிழார் ஓர் இடத்தில் இவ்வந்தணர்களை, நிலத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தணர் நல்லவராய் இருப்பதோடு, வேள்வி செய்து மழை பெய்யவும் காரணராய் இருப்பர். அந்தணரும், வானவரும், ஆனினமும் வாழ்வதால் தண்புனல் வீழும். நல்லவர்கள் வாழ்ந்து அதனால் மழை பொழியுமானால் வளம் பெருகும். வளம் பெருகும்போது அவ்வளத்தை ஒப்புரவினால் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்கு நீதிவேந்தன் ஒருவன் தேவை. அதனைத்தான் வேந்தனும் ஓங்குக, என்றார் ஞானசம்பந்தர். நல்லரசன் ஆட்சியில் தீயது ஆழவும், வேந்தன் ஓங்கவும், நல்லோர் நெறியுடன் வாழவும், அரன் நாமம் உலகெலாம் சூழவேண்டும். அரன் நாமம் சூழ்ந்திருக்குமானால் வையகம் துயர் தீர்ந்து சுகம் பெறும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியே, வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடலுற்றார் ஞானக் குழந்தை. அப்பாடல் காண்க.
வாழ்க அந்தணர், வானவர், ஆன்இனம்,
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது, எல்லாம் அரன்நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே'

*


 திருச்சிற்றம்பலம்

*
 


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


No comments: