Sunday, August 25, 2013

வீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...

திருப்புகலூர் - திருத்தாண்டகம்

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

 


எண்ணுகேன் என்சொல்லி

 

திருச்சிற்றம்பலம்


972 எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்
கழலடியே கைதொழுது காணி னல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.1
973 அங்கமே பூண்டாய் அனலா டினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
6.99.2
974 பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்
அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.3
975 தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.4
976 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.5
977 விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலத் தான மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.6
978 தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.7
979 நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.8
980 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
அக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.9
981 ஒருவனையு மல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மே லேவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.99.10

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

 

 (தில்லையில் அருளியது - கலிவிருத்தம்)

முத்திநெறி அறியாத

திருச்சிற்றம்பலம் 

 

 முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 652

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 653

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658

செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. 659

படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 660

பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 661

திருச்சிற்றம்பலம் 

திருச்சிற்றம்பலம்

ஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....

திருநல்லூர்ப்பெருமணம்

 

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநல்லூர்ப்பெருமணம் தேவாரத் திருப்பதிகம்

  கல்லூர்ப் பெருமணம்

 

திருச்சிற்றம்பலம்


1337 கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
3.125.1
1338. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.
3.125.2
1339. அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
3.125.3
1340. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.
3.125.4
1341. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.
3.125.5
1342.சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.
3.125.6
1343. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.
3.125.7
1344. தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.
3.125.8
1345. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.
3.125.9
1346. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.
3.125.10
1347. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.
3.125.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர்,
தேவியார் - நங்கையுமைநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்


//நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. //

இந்தக் கடைசிப் பாட்டில் ஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை இந்தப் பதிகம் படிக்கும் அனைவரும் பெறவேண்டும் என வேண்டிப் பாடியுள்ளார்.

திருச்சிற்றம்பலம்

திருநொடித்தான்மலை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் திருப்பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)

  தானெனை முன்படைத்

திருச்சிற்றம்பலம்
1017 தானெனை முன்படைத்தான் 7.100.1
     அத றிந்துதன் பொன்னடிக்கே 
 நானென பாடலந்தோ 
     நாயினேனைப் பொருட்படுத்து 
 வானெனை வந்தெதிர்கொள்ள 
     மத்த யானை அருள்புரிந்து 
 ஊனுயிர் வேறுசெய்தான் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1018 ஆனை உரித்தபகை 7.100.2
     அடி யேனொடு மீளக்கொலோ 
 ஊனை உயிர்வெருட்டி 
      ஒள்ளியானை நினைந்திருந்தேன் 
 வானை மதித்தமரர் 
      வலஞ் செய்தெனை ஏறவைக்க 
 ஆனை அருள்புரிந்தான் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1019 மந்திரம் ஒன்றறியேன் 7.100.3
     மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் 
 சுந்தர வேடங்களால் 
     துரி சேசெயுந் தொண்டன்எனை 
 அந்தர மால்விசும்பில் 
      அழ கானை அருள்புரிந்த 
 துந்தர மோநெஞ்சமே 
      நொடித் தான்மலை உத்தமனே. 
 
1020 வாழ்வை உகந்தநெஞ்சே 7.100.4
     மடவார்தங்கள் வல்வினைப்பட் 
 டாழ முகந்தஎன்னை 
     அது மாற்றி அமரரெல்லாம் 
 சூழ அருள்புரிந்து 
     தொண்ட னேன்பரம் அல்லதொரு 
 வேழம் அருள்புரிந்தான் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1021 மண்ணுல கிற்பிறந்து 7.100.5
    நும்மை வாழ்த்தும் வழியடியார் 
 பொன்னுல கம்பெறுதல் 
    தொண்டனேனின்று கண்டொழிந்தேன் 
 விண்ணுல கத்தவர்கள் 
     விரும்ப வெள்ளை யானையின்மேல் 
 என்னுடல் காட்டுவித்தான் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1022 அஞ்சினை ஒன்றிநின்று 7.100.6
    அலர்கொண்டடி சேர்வறியா 
 வஞ்சனை என்மனமே 
    வைகி வானநன் னாடர்முன்னே 
 துஞ்சுதல் மாற்றுவித்துத் 
    தொண்டனேன்பர மல்லதொரு 
 வெஞ்சின ஆனைதந்தான் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1023 நிலைகெட விண்அதிர 7.100.7
    நிலம் எங்கும் அதிர்ந்தசைய 
 மலையிடை யானைஏறி 
      வழி யேவரு வேன்எதிரே 
 அலைகட லால்அரையன் 
     னலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச 
 உலையணை யாதவண்ணம் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1024 அரவொலி ஆகமங்கள் 7.100.8
     அறி வார்அறி தோத்திரங்கள் 
 விரவிய வேதஒலி 
    விண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப 
 வரமலி வாணன்வந்து 
     வழி தந்தெனக் கேறுவதோர் 
 சிரமலி யானைதந்தான் 
     நொடித் தான்மலை உத்தமனே. 
 
1025 இந்திரன் மால்பிரமன் 7.100.9
    னெழி லார்மிகு தேவரெல்லாம் 
 வந்தெதிர் கொள்ள என்னை 
    மத்த யானை அருள்புரிந்து 
 மந்திர மாமுனிவர் 
   இவ னார்என எம்பெருமான் 
 நந்தமர் ஊரனென்றான் 
    நொடித்தான்மலை உத்தமனே. 
 
1026 ஊழிதோ றூழிமுற்றும் 7.100.10
    உயர் பொன்னொடித் தான்மலையைச் 
 சூழிசை யின்கரும்பின் 
    சுவை நாவல ஊரன்சொன்ன 
 ஏழிசை இன்தமிழால் 
    இசைந் தேத்திய பத்தினையும் 
 ஆழி கடலரையா 
 அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. 

 * நொடித்தான்மலையென்பது - கயிலைமலை. 

  திருச்சிற்றம்பலம்
 

திருச்சிற்றம்பலம்

பெறற்கரிய பேறான முக்தி நலம் பெற

நின்ற - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

 

 இருநிலனாய்த் தீயாகி 

 

திருச்சிற்றம்பலம்
920 இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.94.1
921 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி
எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.94.2
922 கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.3
923 காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.4
924 தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.5
925 அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.6
926மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.94.7
927 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.8
928 நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.9
929 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி
ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.10

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்

பிறவிப் பிணி அறுக்கும் பேரருள் மந்திரம் 

http://vivekaanandan.blogspot.in/2013/04/blog-post_6024.html 

 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

No comments: