Sunday, August 25, 2013

எம பயம் நீக்கும் பதிகம்

காலபாசத்திருக்குறுந்தொகை

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

  கண்டு கொள்ளரி

திருச்சிற்றம்பலம்


904 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.
5.92.1
905நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.
5.92.2
906கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.
5.92.3
907 சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.
5.92.4
908 இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.
5.92.5
909 வாம தேவன் வளநகர் வைகலுங்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.
5.92.6
910 படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னம தீசன் அடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.
5.92.7
911 விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.
5.92.8
912இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.
5.92.9
913 மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.
5.92.10

914
அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.
5.92.11

திருச்சிற்றம்பலம்

*


திருவீழிமிழலை - திருவிருத்தம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறைவான்சொட்டச் சொட்டநின் 


திருச்சிற்றம்பலம்
923 வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்
திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்
மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.1
924அந்தமும் ஆதியு மாகிநின்
றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்
றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்
ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.2
925அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்
கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்
ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.3
926தீத்தொழி லான்றலை தீயிலிட்
டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்
ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.4
927தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்
என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்
இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.5
928கண்டியிற் பட்ட கழுத்துடை
யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்
தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்
உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.6
929தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி
மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.7
930சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்
சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்
மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.8
931பிள்ளையிற் பட்ட பிறைமுடி
யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்
பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.9
932கறுக்கொண் டரக்கன் கயிலையைப்
பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்
விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்
என்னைக் குறிக்கொண்மினே.
4.95.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.


திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: