Friday, August 23, 2013

நிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் ஓத வேண்டிய திருப்பதிகம்.அஞ்செழுத்துப் பதிகம்:
 ஞானசம்பந்தருக்கு உபநயன காலத்தில் வேதம் ஓதும் உரிமை தந்தோம் என்ற அந்தணர்கட்கு, வேதத்தில் முக்கியமாயுள்ள அஞ்செழுத்தின் சிறப்பை ஞானசம்பந்தர் எடுத்தோதினார். அத்திருப்பதிகம், "துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்' (தி.3 ப.22 பா.1) என்பது. சோதியில் கலக்கும்போது நிறைவாக ஓதிய, நமச்சிவாயத் திருப்பதிகமாகிய, "காதலாகிக் கசிந்து" என்பதாகும். இதில் "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் நாதன் நாமம் நமச்சிவாயவே"(தி.3 ப.40 பா.1) - என்று ஓதி நிறைவு செய்கின்றார்.

தேவாரம் அருளிய மூவருமே, தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத் திருப்பதிகம் ஒவ்வொன்றருளியுள்ளனர். ஞானசம்பந்தர், தூலசூக்கும, அதிசூக்கும பஞ்சாக்கரங்களை உள்ளடக்கித் தொகுப்பாக அஞ்செழுத்தின் பெருமையை உணர்த்த "துஞ்சலும் துஞ்சல்" என்ற பதிகம் அருளியுள்ளார்.

முதலில் ஓதிய இத்திருப்பதிகத்திலும், இறுதியில் ஓதிய `காதலாகி' என்னும் பதிகத்திலும் முதல் பாடல்களில் ஓதும் முறையை அறிவித்துள்ளார். "நெஞ்சகம் நைந்து நினைமின்" நினைத்தால் வாழ்வில் வரும் கூற்றம் முதலிய இடர்களை அகற்றலாம் - என்கிறது முதல் பதிகம். அதையே "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது" என்று சொல்கிறது, நிறைவுப் பதிகம்.

அவரவர் தகுதிக்கேற்ப தூலசூக்கும பஞ்சாக்கரத்தை எல்லோரும் ஓதி உய்யலாம் என்கின்றன இவ்விரு பதிகங்களும்.

*

திருச்சிற்றம்பலம்


520 காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
01
521.நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.
02
522. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.
03
523.இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.
04
524. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
05
525. மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.
06
526.நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.
07
527.இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
08
528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.
09
529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
10
530.நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
11
திருச்சிற்றம்பலம்

*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


No comments: