Saturday, August 10, 2013

காணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்

 

பாடியவர்: சுந்தரர் தலம்: திருமுருகன் பூண்டி

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆறலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னோடும்
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

வில்லைக் காட்டிவெருட்டி வேடுவர்
விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத்தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர்
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

பசுக்களே கொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க் கொலை பல நேர்ந் துநாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்கழியப் பயிக்கங் கொண்டு நீர்
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

பீறற்கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முருகன்
பூண்டி மாநகர்வாய்
ஏறு கால் இற்ற தில்லையாய்விடில்
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

தயங்கு தோலை உடுத்து சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில்
எத்துக்கிங் கிருத்தீர் எம்பிரானீரே

விட்டிசைப்பன கொக்கரை கொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்துமியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்டலர்ந்து மணங் கமழ் முருகன்
பூண்டி மாந கர்வாய்
இட்டபிச்சை கொண்டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங் கிருத்தீர் எம்பிரானீரே

வேதமோதி வெண்ணீறு பூசி வெண்
கொவணந் தற்றயலே
ஓதமேவிய ஒற்றியூரையும்
உத்திர நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டு
எத்துக்கிங் கிருத்தீர் எம்பிரானீரே

படஅரவு நுண்ணேரிடைப் பனைத்
தோள் வரிநெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்துகந்தீர்
முடவரல்லீர் இடரிலீர் முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவமேறியும் போவதாகில் நீர்
எத்துக்கிங் கிருத்தீர் எம்பிரானீரே

சாந்த மாகவெண் ணீறுபூசிவெண்
பல்தலைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டிமா நகர்வாய்
ஏந்துபூண்முலை மங்கை தன்னோடும்
எத்துக்கிங் கிருத்தீர் எம்பிரானீரே

முந்திவானவர் தாந்தொழும் முருகன்
பூண்டிமா நகர்வாய்
பந்தணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்தவனைச்
சிந்தையிற்சிவ தொண்டனூரன்
உரைத்தன பத்துங்கொண்(டு)
எந்தன் அடிகளை ஏத்துவார் இட
ரொன்றுந்தாமி லரே.


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: