Saturday, August 24, 2013

ஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....

திருநல்லூர்ப்பெருமணம்

 

 

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநல்லூர்ப்பெருமணம் தேவாரத் திருப்பதிகம்

  கல்லூர்ப் பெருமணம்

 

திருச்சிற்றம்பலம்


1337 கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
3.125.1
1338. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.
3.125.2
1339. அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்
றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
3.125.3
1340. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.
3.125.4
1341. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே.
3.125.5
1342.சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.
3.125.6
1343. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.
3.125.7
1344. தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை
உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.
3.125.8
1345. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.
3.125.9
1346. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே.
3.125.10
1347. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.
3.125.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவலோகத்தியாகேசர்,
தேவியார் - நங்கையுமைநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்*

//நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. //

இந்தக் கடைசிப் பாட்டில் ஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை இந்தப் பதிகம் படிக்கும் அனைவரும் பெறவேண்டும் என வேண்டிப் பாடியுள்ளார்.


*


தொண்டு செய்வார் துன்புறார்.

ஞானசம்பந்தர் நிறைவாகப் பாடிய "கல்லூர்ப் பெருமணம்' என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலின் கருத்தை நோக்குக. நன்மை எல்லாம் பொருந்தியுள்ள நல்லூர்ப் பெருமணத்தில் பொருந்தி நின்று இன்புறும் எந்தை ஆச்சாள்புரம் சிவலோகத் தியாகராசர், அவரது இணை அடிகளை அன்புறு சிந்தையராய் மனத்தால் நினைப்போரும், வாக்கினால் ஏத்தித் துதிப்போரும், காயத்தால் தொண்டு செய்வோரும், மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் பெருமானை வழிபடுவோரும் துன்புறார். எனவே இன்புறுவர் என்பது தெளிவு. பாடலைக் காண்போம்:

அன்புறு சிந்தைய ராகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறு வார்அல்லர் தொண்டுசெய் வாரே.

(தி.3 .125 பா.3)
ஆச்சார்யபுரம்:

சைவ சமய ஆசாரியராகிய ஞானசம்பந்தருக்கு முத்திப்பேறு அளித்த இடமாதலின் இத்தலம் ஆச்சாரியபுரம் எனப்பெற்றது. ஆச்சார்யபுரம்தான் ஆச்சார்யாள்புரம் என்றாகி ஆச்சாள்புரம் ஆகியது எனத்தெரிகிறது.

இதற்குமுன் இத்தலம் நல்லூர்ப் பெருமணம் என்றும், திருப்பெருமணம் என்றும் பெயர் பெற்றிருந்தது என்பது சேக்கிழார் திருவாக்கால் புலனாகிறது. ஞானசம்பந்தரும் "நல்லூர்ப் பெருமணம்" என்றே குறிப்பிடுகின்றார். சம்பந்தருக்குத் திருமணம் "நல்லூர்ப் பெருமணத்தில்" நடந்ததும், அத்திருமணமே பெருமணமாக (முத்திப் பேறாக) நிறைவெய்தியதும், திருவருட் பொருத்தமேயாம்.

மணம் - கலப்பு. ஈருயிர் ஒருயிராகக் கலத்தல். பெருமணம் - ஆருயிர் இறைவனுடன் கலத்தல் - அஃதாவது முத்திப்பேறு. ஞானசம்பந்தர் முத்திப்பேற்றுக்குரிய பெருமை நல்லுர்ப் பெருமணமாகிய இத்தலத்திலேயே எய்தியது என்பது திருவருட் சிறப்பாகும்.

இத்தகைய புனிதத் தலங்களின் சிறப்பையும், திருமுறையின் பெருமையையும் ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், உயிர்கள் உய்திபெற ஷ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

ஒண்தமிழ் ஓதி உயர்வுறுவோமாக.

*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: