Monday, August 12, 2013

வீண்பழி, அவமானங்களிலிருந்து விடுபடுவதற்குஎந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஏதாவது ஒரு தடை வருவதைத் தடுப்பதற்கும், வீண்பழி, அவமானங்களிலிருந்து விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: நெடுங்குளம்மறைஉடையாய், தோல் உடையாய், வார்சடைமேல் வளரும்
பிறைஉடையாய், பிஞ்ஞகனே, என்றுஉனைப் பேசின் அல்லால்
குறைஉடையார் குற்றம் ஓராய்; கொள்கையினால் உயர்ந்த
நிறைஉடையார் இடர்களையாய்; நெடுங்களம் மேயவனே


கனைத்து எழுந்த வெண்திசை சூழ்கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதேவ, நின்னை
மனத்தக்கத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


நின் அடியே வழிபடுவான், நிமலா, நினைக்கருத,
என் அடியான்உயிரை வவ்வேல் என்று அடற்கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின் அடியார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


மலைபுரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா,
தலைபுரிந்த பலி மகிழ்வாய், தலைவநின்தாள் நிழற்கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


பாங்கின்நல்லார், படிமம்செய்வார், பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு, தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும், தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்;
அருத்தன் ஆய ஆதிதேவன் அடியினையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய்; சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழி யால் ஏத்தி, இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


வேழவெண் கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடுஇலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே


வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால், தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே


நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மா மறுகின் சிரபுரக் கோன், நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார், பாவம் பறையுமே

திருச்சிற்றம்பலம்.

*திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

No comments: