Saturday, August 10, 2013

ஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகளை வீழ்த்த உதவும் பதிகம்

 

(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)
தனித் திருக்குறுந்தொகை                                           5-ம் திருமுறை     சைவ சமயத்தைச் சார்ந்து திருவதிகை நாதனைக் 'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என எடுத்தோதிச் சூலை நோய் தீரப்பெற்றுத் 'திருநாவுக்கரசு' என்னும் நாமத்தை, இறைவனார் அருளிச் செய்த பின்னர், சமணர்தம் ஏவலால் திருநாவுக்கரசு சுவாமிகள், சுண்ணாம்பு நீற்றறையில் இடப்பட்டார். சிவ மந்திரத்தை நெஞ்சுள் இருத்தி ஓதியவாறு விளங்கிய சுவாமிகளுக்கு, அவ்வெம்மையுடைய நீற்றறை பனிக்குகை போலக் குளுகுளுவென்றாயிற்று. அடியவரின் துயர் துடைக்கும் கருணாகர மூர்த்தியின் கருணையை நினைந்து நெஞ்சம் நெகிழ, கண்ணீர் கசிய இத்;திருப்பதிகம் அவர் நெஞ்சத்தினடியிலிருந்து பிறந்தது.

     சுண்ணாம்புக் காளவாய் வெப்பத்திலே வெந்து மடிந்து நீறாகிப் போயிருப்பார் நாவுக்கரசர் என்று எண்ணி மகிழ்ந்த பல்லவ மன்னனும், சமணர்களும் காளவாய்க் கதவைத் திறக்கச் செய்தார்கள் - அந்தக் காட்சியைக் கண்டு ரசிக்க. கதவு திறக்கப்பட்டது. அனல்காற்று வீசவில்லை. குளிர் தென்றல் குபுகுபு என்று வெளிப்பட்டது. சாம்பலான நாவுக்கரசரின் நீறான உடலுக்குப்பதில் - சம்மணமிட்ட நிலையில், உடலில் திருநீறணிந்த கோலத்தில் அவர் நிஷ்டையில் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.


      அத்தகைய அற்புதத்தை  நிகழ்த்திக் காட்டிய கிடைத்தற்கரிய அற்புதத் திருப்பதிகம் இதுவாகும். இத்திருப்பதிகத்தை, சிவபெருமானை நெஞ்சில் நிறுத்தி நாம் பயபக்தியுடன் பாராயணம் செய்தால், எம்பெருமானுடைய திருவருளை நாம் பரிபூரணமாகப் பெறலாம். பகைவர்கள் தோற்று ஓடுவர். பழவினைகள் நம்மை அணுகாது என்பது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்

          1.   மாசில் வீணையும் மாலை மதியமும்
              வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்;
              மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
              ஈசன் எந்தை இணையடி நீழலே.


    சிவபெருமானுடைய இணை மலர்களாகிய திருவடியின் ஒளியானது, குற்றமில்லாத வீணையின் நாதமாகச் செவிக்கு இனிமை தருவதும், மாலை நேரத்தில் விளங்கும் முழு நிலவினைப் போன்று கண்ணுக்கு குளிர்ச்சியை அளிப்பதும், வீசுகின்ற காற்று போன்று நாசிக்கு புத்துணர்வை நல்குவதும், இளவெயில் போன்று மெய்யினுக்கு இளகிய வெப்ப உணர்வைத் தருவதும், வண்டுகள் ஒலிக்கும் நயுமணம் கமழும் பொய்கையில் விளங்கும் நீரின் குளிர்ந்த தன்மை போன்று வாய்க்குச் சுவை தருவதும், ஆகியவாறு விளங்கிற்று.          2.   நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
              நமச்சி வாயவே நானறி விச்சையும்;;
              நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
              நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

   நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது, இறைவனுடைய திருவடி மலராகத் திகழ்ந்து பரஞானம், அபரஞானம் ஆகியவற்றை நல்கும் சிறப்புடையதாகும். நமச்சிவாய என்னும் அத்திருவைந்தெழுத்தானது, நான் அறிந்ததும், கற்றதும் ஆகிய கல்வியில் விளங்கும் சிறப்பு ஆகும். நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்தை, நாவானது இடைவிடாது நவின்று ஏத்தியும், உள்ளமானது தியானித்தும் இருக்கும். நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது, உலகில் நலம் தரக்கூடிய நல்ல நெறியைக் காட்டும்.          3.   ஆளா காராளானா ரைஅடைந் துய்யார்
              மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
              தோளா தசுரை யோதொழும் பர்செவி
              வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

     சிலர், இறைவனுடைய திருவடிக்கு ஆளாக மாட்டார்கள்ளூ இறைவனுடைய திருத்தொண்டர்களை அடைந்து, அவர்கள்பால் அறிவுரை பெற்று உய்யும் தன்மையைக் கொள்ள மாட்டார்கள். இத்தன்மை யுடையவர்கள் இறைவனுக்கு மீளா அடிமைத்திறம் கொண்டு மேவி மெய்ப்பொருளின்கண் பற்றி மேவும் ஆற்றல் அற்றவர்கள் ஆவர். அவர்களுடைய காதுகள் நற்சொற்களால் துளைக்கப்படாதனவாகும். அவர்கள், இறைவனுக்கு ஆட்படாதவர்களாகி, இம் மண்ணுலகில் பயனற்றவர்களாய்க் காலத்தைக் கழிப்பவர்கள் ஆவர்.          4.   நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்
              சுடலை சேர்வது சொற்பிர மாணமே
              கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
              உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


     இவ்வுலக வாழ்க்கையில் துன்புறுகின்ற மாந்தர்களே! அத்தகைய துன்பமானது தீர்வதற்கு என்ன செய்தீர்கள்? வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் இவ்வுடலானது, சுடலையில் கொண்டு சேர்க்கப்பட்டு, அழிக்கப் பெறுதலை உடையதுளூ ஊர் மக்களால் கோபமும் வெறுப்பும் கொண்டு இகழப்படுவது. கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் எனக் கொண்டு உண்டவர், சிவபெருமான். அப்பரமன், கருணை கொண்டு காத்தருளுவதால் வாழ்கின்றீர். அப்பெருமான், கைவிட்டால் இவ்வுடல் வெறுக்கத்தக்க உடலாகும். பெருந்தீங்கு உண்டாகும், அறிவீராக! என்பது குறிப்பு.          5.   பூக்கைக் கொண்டான் பொன்னடி போற்றிலார்
              நாக்கைக் கொண்டான் நாமம் நவில்கிலார்
              ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
              காக்கைக் கேஇரை ஆகிக் கழிவரே.

   மாந்தர்கள், மலர்களைக் கைகளால் தூவிச் சிவபெருமானை ஏத்தித் திருவடியைப் பணிதல் வேண்டும். நாவினால் அரனது நாமமாகிய திருவைந் தெழுத்தை ஓதுதல் வேண்டும். அவ்வாறு செய்து நற்கதி யடைவதற்கு முயலாமல், இவ்வுடலுக்கு இரை தேடி அதனைப் பேணும் தன்மைக்கே உழல்வார் களானால் அத்தகைய உடலானது, காக்கைக்கே இரையாகி அழிந்து போகும்.          6.   குறிக ளும்அடை யாளமுங் கோயிலும்;
              நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும்;;
              அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
              பொறியி லீர்மன மென்கொல் புகாததே.

     புலன்களை நன்னெறியின்பால் செலுத்தாதவர்களே! இறைவனுடைய திருவுருவங்கள், அப்பரமனின் அடையாளங்களாகிய திருவெண்ணீறு, உருத்தராக்கம், இடபக் கொடி முதலான செல்வங்கள், திருக் கோயில்கள் எனவும், சமய நெறிகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும் மற்றும் ஒழுக்கங்களை ஓதும் நூல்களும், வேதங்களும் பலவாறாக விளங்கிடினும், மனத்தினை ஈசன்பால் செலுத்தி வழிபடுவதற்குத் தடை யாது கொல்!          7.   வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
              தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்;
              சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
              வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

           சிவபெருமானுடைய திருவருளால் யாவும் படைக்கப் பெற்றது. இம் மானிடப் பிறவியானது வினையிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கு உறுதுணையாகவே நமது அவயங்கள் இயங்க வேண்டும் என்பதற்காகவும், இத்தேகம் வழங்கப் பெற்றது. இத்தன்மையில், வாயானது, சிவபெருமானுடைய புகழைப் பேசியும், திருநாமத்தை ஓதியும் விளங்க வேண்டும்ளூ நெஞ்சமானது, ஈசனையே இடையறாது பற்றி ஒழுக வேண்டும்ளூ தலையானது, திருக்கோயிலையும், திருத்தொண்டர்களையும் வணங்க வேண்டும்ளூ கைகளானவை, மலர்கள் கொண்டு தூவிப் பெருமானின் திருப்பாத மலர்களை அருச்சித்துக் கூப்பி வணங்குதல் வேண்டும். நெஞ்சமே! இவ்வாறு செய்யாது நெடுங்காலம் கழித்தனை. இவ்வாறு செய்தால் வினை யாவற்றையும் வீழ்த்தி இருக்கலாமே! ஆ..! என் செய்வது...!          8.   எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
              தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்டு
              உழுத சால்வழி யேஉழு வான்பொருட்டு
              இழுதை நெஞசமி தென்படு கின்றதே.

     உலகில் காம விகாரப்பட்டு மயங்கிப் பின் தெளிந்த தன்மையில், ஈசனை ஏத்தி வழிபடும் நெஞ்சமே! வயலில் உழுத சால்வழி, மீண்டும் உழுதல் போன்று ஏன் இழிவு கொள்கின்றன.
          9.   நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
              புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;;
              பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
              நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

     பொன் போன்ற அழகிய சடையுடைய ஈசன், நெக்குருகி நின்று வழிபடும் திருத் தொண்டர்களின் நெஞ்சுள் புகுந்து வீற்றிருப்பவர். அவர், பொய்த் தன்மையுடன் பூவும் நீரும் கொண்டு ஏத்துகின்றவர்களைக் கண்டு, அத்தகைய பொய் வழிபாடு செய்பவர்கள் நாணுமாறு, புன்னகை புரிபவர்.         10.   விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்;
              மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;;
              உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
              முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

     சிவபெருமான், விறகுக் கட்டையில் மறைந்து மேவும் நெருப்புப் போன்றும், பாலில், கண்ணுக்குப் புலனாகாது விளங்கும் நெய் போன்றும் திகழ்பவர். அவர், மாணிக்கச் சோதியனாய் உள்ளிருந்து ஒளிர்பவர். அப்பரமனை, அன்பாகிய உறவு கொண்டு, அடிமைத் தளை என்னும் உணர்வில் ஞானமாகிய கயிறால் நெஞ்சுள் கடைய, அவர் அமுதம் போன்று முன்னின்று வெளிப்படுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்.

http://devaramthiruvasagam.blogspot.in/2013/03/blog-post_3994.html

*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: