Thursday, August 8, 2013

மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓதுவதால்....

 
ஒருவர் நமக்கு செய்த நன்மை எல்லாவற்றையும் மறந்து விட்டு அவர் செய்த ஏதாவது ஒன்றிரண்டு தீமையை மட்டுமே மனதில் வைத்திருப்பவர் மனம் தெளிவு பெற இப்பதிகம் உதவும். நன்றி மறப்பது நன்றன்று. செய் நன்றி மறவாத உத்தம குணத்தையும், சற்குரு நமக்கு அளித்த வரப் பிரசாதங்களை நினைவு கூர்ந்து குரு சேவையில் உன்னதம் பெறவும் பக்தியை வளர்ப்பது இப்பதிகம். மேலும், ஒருவரிடம் பல நற்குணங்கள் மிகுந்திருக்கும், ஆனால் அவரிடம் ஏதாவது ஒன்றிரண்டு தீய குணங்கள் இருக்கலாம். ஆனால், பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவையைப் போல நாம் ஒருவரிடம் உள்ள தீய குணத்தை விடுத்து நற்குணத்தை மட்டுமே பாராட்டும் பண்பை வளர்க்க அருள் புரிவது இப்பதிகம். மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓதுவதால் அவர் மனச் சாந்தி பெற்று இறைவனடி சேரவும் இறை பக்தி மிகுந்த அடுத்த பிறவிகளை அடையவும் வழி ஏற்படும்

Thevaram

நமச்சிவாய பதிகம்: திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும், சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார்..

திருச்சிற்றம்பலம்

திருப்பாண்டிக்கொடுமுடி

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)

 http://www.mediafire.com/listen/68858ccpwha5sd4/11+Mattru+patrena.wavOk.mp3

 

மற்றுப்பற் றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன்இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

 .
இட்டன் நும்மடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவையென்றலால் கருதேன் கிளர்புனற் காவிரி
வட்ட வாசிகைகொண்டடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


ஓவு நாள் உணர்வழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனற்காவிரிப்
பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம்பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுதேத்துஞ் சீர்க்கரை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


அஞ்சினார்க்கரண் ஆதியென்றடி யேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்றடித் தொண்டனேற் கருள் நல்கினாய்க் கழிகின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சணி கண்டம் நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


ஏடு வான் இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல்
ஆடு பாம்பதரைக் கசைத்த அழகனே அந்தன் காவிரிப்
பாடு தண் புனல் வந்திழி பரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


செம்பொனேர் சடையாய்த் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
வம்புலாங் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை
கொம்பின்மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணியென்று
பேரெணாயிரங் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழுங்கரை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


கோணிய பிறை சூடியைக் கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
பாணுலா வரிவண்டரை கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க் கில்லைத் துன்பமே.


திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்


திருப்பாண்டிக்கொடுமுடி

திருச்சிற்றம்பலம்

 

 கொடுமுடிநாதர்  -  திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

 

திருச்சிற்றம்பலம்

 

http://www.kulaluravuthiagi.com/thirumurai2.htm


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்
 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: