Friday, August 16, 2013

அச்சம் போக்கும் பாடல்

 

அச்சம் போக்கும் பாடல் இது. உள்ளத்தில் அச்சம் தோன்றுகையில் உச்சரிக்க அச்சமும் போய் அச்சத்திற்கான காரணமும் போகும்.

கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே


தார் மார்பா! தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். "கார்கடம்பத் தார் எம் கடவுள்" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.

வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே! புரிகிறதல்லவா! இதைத்தான் இளங்கோவும் "சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.

இப்படியெல்லாம் அருணகிரி எதற்கு அழைக்கிறார் முருகனை? காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!
"அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க" என்கிறார் தேவராய சுவாமிகள்.
"காலன் எனையணுகாமல் உனதிரு
தாளில் வழிபட அருள்வாயே" என்கிறது திருப்புகழ்.

கலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க! மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது? சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் "சூர்மா மடியத் தொடு வேலவனே" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
 

No comments: