Saturday, August 10, 2013

புனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்

 

(திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது)
திருக்குறுந்தொகை                                                5-ம் திருமுறை      காவிரித் தென்கரைத் தலம் 127இல், திருக்குடமூக்கு திருத்தலம் 26ஆவது திருத்தலமாகும். இது கும்பகோணத்தில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. கும்பகோணம் கும்பேஸ்வரர் மீது திருநாவுக்கரசர் சுவாமிகள் பாடிய இந்த தேவாரப் பாடல்களை, மாசிமகத்தன்று சிவபெருமானை நெஞ்சில் நிறுத்தி பயபக்தியுடன் பாராயணம் செய்தால், மகாமகக் குளத்தில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பது திண்ணம்.திருச்சிற்றம்பலம்

          1.   பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்கு
              ஆவ ணத்துடை யான்அடி யார்களைத்
              தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
              கோவ ணத்துடை யான்குட மூக்கிலே.
     சிவபெருமான், செந்தாமரைப் பூவின் வண்ணத்தை உடையவர்ளூ புண்ணிய மூர்த்தியாய் விளங்குபவர்ளூ அடியவர்பால் நண்ணி நின்று அருள் புரிந்து எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுமாறு செய்பவர்ளூ தீவண்ணம் உடைய திருமேனியில் திருநீறு பூசி விளங்குபவர்ளூ கோவண ஆடையுடையவர். அத்தகையவர் குடமூக்கிலே இருந்து அருள் பாலிக்கிறார்.          2.   பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
              தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
              வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
              கூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.

     இப் பூவுலகத்தில் மேவும் மாந்தர்களே! தோன்றி அழிதலாகிய பயனற்ற விளையாட்டினைச் செய்து காலத்தைக் கழிக்காதீர். மிக வேகமாக ஆரவாரித்து ஆடுகின்ற காளி தேவியின் வேகம் தீருமாறு நடனமாடிய சிவபெருமான், குடமூக்கில் உறைகின்றார். அப் பெருமானுடைய அருள் திறத்தைச் சிந்தையுள் கொண்டு ஏத்தி, நற்கதி அடைவீராக!          3.   நங்கை யாளுமை யாளுறை நாதனார்
              அங்கை யாளொடு அறுபதந் தாழ்சடைக்
              கங்கை யாளவள் கன்னி யெனப்படும்
              கொங்கை யாளஉறை யுங்குட மூக்கிலே.

     பெண்ணிற் சிறந்தவளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர் சிவபெருமான். அப் பெருமானுடைய சடை முடியில் விளங்கும் கங்கையானவள், குடமூக்கில் கன்னி (காவிரி) எனப்படும் தன்மையில் தங்கி உள்ளாள்.          4.   ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
              ஏதா னும்இனி தாகும் மியமுனை
              சேதா ஏறடை யான்அமர்ந் தவிடம்
              கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.

     சிவபெருமானுடைய அருள் திறத்தை ஓதி உரைக்கின் அடங்காது. அப் பெருமானுடைய புகழைக் கூறக் கூக இனிமை உண்டாகும். இடப வாகனத்தை உடைய அப்பெருமான் வீற்றிருக்கும் குடமூக்கில், யமுனையும் கோதாவரியும் தீர்த்தங்களாகப் பொருந்தி விளங்கும்.          5.   நக்க ரையனை நாடொரும் நன்னெஞ்சே
              வக்க ரையுறை வானை வணங்குநீ;
              அக்க ரையோடு அரவரை ஆர்த்தவன்
              கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.

     நல்ல நெஞ்சே! நீ ஈசனை நாள்தோறும் துதித்திடுவாயாக! அப்பெருமான், திருவக்கரை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு விளங்குபவர்ளூ அவர் ஆர்வத்தோடு தன்னுடைய அரையில் பாம்பை கட்டியுள்ளவர்ளூ அவன் கொக்கரையை (உடுக்கு) உடையவன். அத்தகைய சிறப்பினை உடைய சிவபெருமான் குடமூக்கில் வீற்றிருக்கிறார். அத்தகையவரை நீ வணங்குவாயாக!          6.   துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
              பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
              மறவனாய்ப் பார்த்தன் மேற்கணை தொட்டஎங்
              குறவ னார்உறை யுங்குட மூக்கிலே.

     யான் எனது என்கின்ற அகப்பற்றினையும் புறப்பற்றினையும் நீக்கித் துறந்த நெஞசினராகிச் சிவபெருமானைப் பற்றி நின்று விளங்குகின்ற திருத்தொண்டர்களே! இம்மண்ணுலகில் பிறவாமையாகிய பெருஞ் செல்வத்தைப் பெறுகின்ற நோக்கத்தைக் குறியாகக் கொண்டு, ஈசனின் திருநாமங்களைத் திரும்பத் திரும்ப ஓதுங்கள். சிவபெருமான், பக்தர்கள்பால் பெரும் பித்து உடையவர்ளூ வீரனாகிய வேட்டுவ வடிவம் தாங்கிப் பாசுபதம் முதலான அத்திரங்களை பார்த்தனுக்கு வழங்கியருளியவர். அப்பரமன், குடமூக்கை இருப்பிடமாகக் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.          7.   தொண்ட ராகித் தொழுது பணிமினோ
              பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
              விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்;
              கொண்ட வன்உறை யுங்குட மூக்கிலே.

     முற்பிறவியில் செய்த தீவினையைத் துறப்பதற்குச் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து தொழுது வணங்குவீராக! அப்பெருமான் மூன்று புரங்களையும் ஒரு நொடிப் பொழுதில் அழித்த வல்லமையுடையவர். அவர், குடமூக்கில் இருந்து அருள்பாலிக்கிறார்.          8.   காமி யஞ்செய்து காலங் கழியாதே
              ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ
              சாமி யோடு சரச்சு வதியவள்
              கோமி யும்உறை யுங்குட மூக்கிலே.

     தொண்டர்களே! உலகத்தின் மீது பற்றுக் கொண்டு அதற்குரிய கிரியைகளைச் செய்து காலத்தை வீணே கழிக்காதீர்கள். வேத நெறியில் உள்ளவாறு வேள்வியைச் செய்து, ஈசனை வணங்குங்கள். அக வேள்வியாகக் கொல்லாமை முதலாகிய அட் மலர்கள் கொண்டு, தியானம் செய்து வழிபடுங்கள். அப் பெருமான், செல்வத்தோடு சரஸ்வதி, கோதாவரி முதலான புனித தீர்த்தங்கள் மேவும் குடமூக்கில் வீற்றிருக்கிறார்.          9.   சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
              பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
              பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்;
              குரவ னார்உறை யுங்குட மூக்கிலே.

     மெய்யினை வருத்தியும், விரதங்கள் மேவியும், திருத்தொண்டு ஆற்றியும், சிவபெருமானுக்குப் பக்தர்களாக இருந்து நாள்தோறும் அவரை ஏத்துவீராக! பிரமன் திருமால் மற்றும் எல்லாத் தேவர்களுக்கும் நல்ல ஆசானாக இருந்து அருள்பாலிக்கின்ற அப்பெருமர், குடமூக்கில் வீற்றிருக்கிறார்.         10.   அன்று தானரக் கன்கயி லாயத்தைச்
              சென்று தானெடுக் கஉமை யஞ்சலும்;
              நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
              கொன்று கீதங்கேட் டான்;குட மூக்கிலே.

     அன்று இராவணன் என்ற அரக்கன் கயிலையைப் பெயர்த்து உமாதேவியும் அஞ்சுமாறு எடுக்கத் தனது திருப்பாத விரலை ஊன்றி, அவனை வருத்திச் சாம கானம் கேட்டு விளங்கிய ஈசன் குடமூக்கிலே இருந்து அருள் பாலிக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

http://devaramthiruvasagam.blogspot.in/2013/03/blog-post_20.html

*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

No comments: