Saturday, August 31, 2013

படுதுயர் களைய

திருவடமுல்லைவாயில்

 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)

 திருவுமெய்ப் பொருளுஞ்

திருச்சிற்றம்பலம்


698திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.1
699கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றா யென்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.2
700விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.3
701பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.4
702சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.5
703மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.6
704மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.7
705நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னையாட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.8
706மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.9
707சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
7.69.10
708விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.
7.69.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - கொடியிடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


பக்தி நெறியில் நிலைத்து நிற்க

7.68 திருநள்ளாறு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)

 

செம்பொன் மேனிவெண்

திருச்சிற்றம்பலம்

688செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
கரிய கண்டனை மால்அயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.1
689விரைசெய் மாமலர்க் கொன்றையி னானை
வேத கீதனை மிகச்சிறந் துருகிப்
பரசு வார்வினைப் பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆடவல் லானைக்
குரைக டல்வரை ஏழுல குடைய
கோனை ஞானக் கொழுந்தினைத் தொல்லை
நரைவிடை யுடையநல் லாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.2
690பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்
புவியைக் காற்றினைப் புனல்அனல் வெளியைச்
சேவின் மேல்வருஞ் செல்வனைச் சிவனைத்
தேவ தேவனைத் தித்திக்குந் தேனைக்
காவி யங்கண்ணிப் பங்கனைக் கங்கைச்
சடைய னைக்கா மரத்திசை பாட
நாவில் ஊறும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.3
691தஞ்சம் என்றுதன் தாளது வடைந்த
பாலன் மேல்வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானை
நினைப்ப வர்மனம் நீங்ககில் லானை
விஞ்சை வானவர் தானவர் கூடிக்
கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சம் உண்டநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.4
692மங்கை பங்கனை மாசிலா மணியை
வான நாடனை ஏனமோ டன்னம்
எங்கு நாடியுங் காண்பரி யானை
ஏழை யேற்கெளி வந்தபி ரானை
அங்கம் நான்மறை யால்நிறை கின்ற
அந்த ணாளர் அடியது போற்றும்
நங்கள் கோனைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.5
693கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருளறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்பு தப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.6
694மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
மாய னைநால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.7
695மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை
மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேத னைவேத வேள்வியர் வணங்கும்
விமல னையடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை அருளித்
தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.8
696இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை
எடுப்ப ஆங்கிம வான்மகள் அஞ்சத்
துலங்கு நீண்முடி ஒருபதுந் தோள்கள்
இருப துந்நெரித் தின்னிசை கேட்டு
வலங்கை வாளடு நாமமுங் கொடுத்த
வள்ள லைப்பிள்ளை மாமதிச் சடைமேல்
நலங்கொள் சோதிநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
7.68.9
697செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ்
சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
மறந்து நான்மற்று நினைப்பதே தென்று
வனப்ப கையப்பன் ஊரன்வன் றொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சுஞ்
சிந்தையுள் ளுருகிச் செப்ப வல்லார்க்
கிறந்து போக்கில்லை வரவில்லை யாகி
இன்பவெள் ளத்துள் இருப்பர்க ளினிதே.
7.68.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியயீசுவரர்,
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம் 

 

*

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

 

குருவருள் பெற

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவெண்ணெய்நல்லூர் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 1வது திருப்பதிகம்)

பித்தாபிறை சூடீபெரு மானே  

 

   திருச்சிற்றம்பலம்
 
பித்தாபிறை சூடீபெரு 
  மானே அருளாளா 
எத்தான்மற வாதேநினைக் 
  கின்றேன்மனத் துன்னை 
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
அத்தாஉனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.01
 
நாயேன்பல நாளும்நினைப் 
  பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற 
  லாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
ஆயாஉனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.02
 
மன்னேமற வாதேநினைக் 
  கின்றேன்மனத் துன்னைப் 
பொன்னேமணி தானேவயி 
  ரம்மேபொரு துந்தி 
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
அன்னேஉனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.03
 
முடியேன்இனிப் பிறவேன்பெறின் 
  மூவேன்பெற்றம் ஊர்தீ 
கொடியேன்பல பொய்யேஉரைப் 
  பேனைக்குறிக் கொள்நீ 
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
அடிகேளுனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.04
 
பாதம்பணி வார்கள்பெறும் 
  பண்டம்மது பணியாய் 
ஆதன்பொருள் ஆனேன்அறி 
  வில்லேன் அருளாளா 
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
ஆதீஉனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.05
 
தண்ணார்மதி சூடீதழல் 
  போலும்திரு மேனீ 
எண்ணார்புரம் மூன்றும்எரி 
  உண்ணநகை செய்தாய் 
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
அண்ணாஉனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.06
 
ஊனாய்உயிர் ஆனாய்உடல் 
  ஆனாய்உல கானாய் 
வானாய்நிலன் ஆனாய்கடல் 
  ஆனாய்மலை ஆனாய் 
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
ஆனாய்உனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.07
 
ஏற்றார்புரம் மூன்றும்எரி 
  உண்ணச்சிலை தொட்டாய் 
தேற்றாதன சொல்லித்திரி 
  வேனோசெக்கர் வானீர் 
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
ஆற்றாயுனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.08
 
மழுவாள்வலன் ஏந்தீமறை 
  ஓதீமங்கை பங்கா 
தொழுவார்அவர் துயர்ஆயின 
  தீர்த்தல்உன தொழிலே 
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
அழகாஉனக் காளாயினி 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.09
 
காரூர்புனல் எய்திக்கரை 
  கல்லித்திரைக் கையால் 
பாரூர்புகழ் எய்தித்திகழ் 
  பன்மாமணி உந்திச் 
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
  நல்லூர் அருட்டுறையுள் 
ஆரூரன்எம் பெருமாற்காள் 
  அல்லேன்எனல் ஆமே.     7.1.10

     - திருச்சிற்றம்பலம் -
 
*
 
 

திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

பெறற்கரிய பேறான முக்தி நலம் பெற

நின்ற - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

 இருநிலனாய்த் தீயாகி 

 

திருச்சிற்றம்பலம்
920 இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.94.1
921 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி
எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.94.2
922 கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.3
923 காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.4
924 தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.94.5
925 அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.6
926மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.94.7
927 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.8
928 நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.94.9
929 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகி
ஏலா தனவெலாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.94.10

திருச்சிற்றம்பலம்

*


திருச்சிற்றம்பலம்

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

அரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற

திருவாரூர் - போற்றித்திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

 கற்றவர்க ளுண்ணுங் 

 

திருச்சிற்றம்பலம்


320கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.1
321வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.2
322மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.3
323பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.4
324நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.5
325சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.6
326வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.7
327உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.8
328பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.9
329பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலத் தானனே போற்றி போற்றி.
6.32.10
திருச்சிற்றம்பலம்

*


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

விசேட தீக்கை விரைவில் பெற

இலிங்கபுராணம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

 புக்க ணைந்து புரிந்தல 

 

திருச்சிற்றம்பலம்


936புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.1
937அலரு நீருங்கொண் டாட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச்
செலவு காணலுற் றாரங் கிருவரே.
5.95.2
938ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.3
939நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.4
940எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.5
941மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.6
942கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.
5.95.7
943வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறுகந் தேறெரி வண்ணனை
அந்தங் காணலுற் றாரங் கிருவரே.
5.95.8
944இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற் றாரங் கிருவரே.
5.95.9
945கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே.
5.95.10
946செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. 11
5.95.11

திருச்சிற்றம்பலம்

*


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


அடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க

 

 

நமச்சிவாயப்பதிகம்

 

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)

 

 சொற்றுணை வேதியன்

 

திருச்சிற்றம்பலம்


104சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
4.11.1
105 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
4.11.2
106 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
4.11.3
107 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4.11.4
108 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
4.11.5
109 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
4.11.6
110 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
4.11.7
111 இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
4.11.8
112 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
4.11.9
113 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
4.11.10

இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.


திருச்சிற்றம்பலம்.

*

தனி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

 

 

திருச்சிற்றம்பலம்


885 மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
5.90.1
886நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
5.90.2
887ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
*தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
* தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்
5.90.3
888நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
5.90.4
889பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
5.90.5
890குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.
5.90.6
891வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
5.90.7
892எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.
5.90.8
893நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.
5.90.9
894விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
5.90.10

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்


 

அருந்துயர் கெடவும் அருவினை கெடவும்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநெல்வேலி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 92வது திருப்பதிகம்)திருநெல்வேலி

 

மருந்தவை மந்திரம்

 

திருச்சிற்றம்பலம்


988 மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.1
989.என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.2
990.பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.3
991.காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.4
992.ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.5
993. வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.6
994. அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.7
995. முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.8
996. பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.9
997. துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.
3.92.10
998.பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே.
3.92.11

திருச்சிற்றம்பலம்


*


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்